ஓடும் லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயன கழிவில் வழுக்கி விழுந்து 10 பேர் காயம்


ஓடும் லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயன கழிவில் வழுக்கி விழுந்து 10 பேர் காயம்
x
தினத்தந்தி 2 March 2021 8:55 PM GMT (Updated: 2 March 2021 8:55 PM GMT)

ஓடும் லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயன கழிவில் வழுக்கி விழுந்து 10 பேர் காயமடைந்தனா்.

நெல்லிக்குப்பம், 

கடலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை ஆந்திர மாநிலம் நோக்கி புறப்பட்டது. அந்த லாரி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் குமராபுரம், நத்தப்பட்டு, கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழயாக சென்றபோது, லாரியில் இருந்த ரசாயன கழிவுகள் சாலையில் கொட்டியது.

 அந்த சமயத்தில் லாரியின் பின்னால் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கழிவுகள் மீது ஏறிச்சென்றபோது திடீரென அடுத்தடுத்து கீழே வழுக்கி விழுந்தனர். இதில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ரசாயன கழிவுகள் ஏற்றிச் சென்ற லாரியை விரட்டிச் சென்று சிறைபிடித்ததோடு, அதன் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

 மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, சாலையில் கொட்டிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கீழே விழுந்ததில் காயமடைந்த 10 பேர் அருகே உள்ள  ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story