சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 2 March 2021 10:50 PM GMT (Updated: 2 March 2021 10:50 PM GMT)

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நேற்று துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சேலம்:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நேற்று துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
துணை ராணுவத்தினர் வருகை
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம்) தமிழகம் வந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்துக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். இதில் ஒரு கம்பெனி மாவட்டத்துக்கும், மற்றொரு கம்பெனி மாநகரத்துக்கும் வந்திருக்கிறார்கள். இவர்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் முக்கியமான பகுதிகளில் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.
கொடி அணிவகுப்பு
அதன்படி நேற்று காலை சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு 3 தியேட்டர், ஜெய்நகர், களரம்பட்டி, எருமாபாளையம் ஜங்சன் வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் வரை சென்றது.
இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி ஏந்திய நிலையில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 220 போலீசார் பங்கேற்றனர். இதே போல் மாலையில் அஸ்தம்பட்டி பகுதியில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு அஸ்தம்பட்டியில் இருந்து, சின்னதிருப்பதி வழியாக கன்னங்குறிச்சி வரை சென்றது. அப்போது பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் ஊர்வலமாக சென்ற துணை ராணுவத்தினர், போலீசார் மீது மலர்களை தூவினார்கள்.

Next Story