ஊத்துக்கோட்டை அருகே ரூ.24 கோடியில் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்தால் சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாயில் ரூ.24 கோடியில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்பேரில் ஆந்திராவில் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என்று மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோமீட்டர் தூரம், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்கிறது. 1984-ம் ஆண்டு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
சீரமைப்பு பணிகள் தொடக்கம்
1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் 21-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 6-ந்தேதி நிறுத்தப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் ஜீரோ பாண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா கால்வாய் பல பகுதிகளில் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிருஷ்ணா கால்வாயில் முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோமீட்டர் தூரத்துக்கு கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மீதமுள்ள தூரத்துக்கு கால்வாய் சீரைமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story