ஊராட்சி செயலாளரிடம் நகை பறிப்பு


ஊராட்சி செயலாளரிடம்  நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 March 2021 5:58 PM GMT (Updated: 3 March 2021 5:58 PM GMT)

தியாகதுருகம் அருகே ஊராட்சி செயலாளரிடம் 6¼ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே குருபீடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி தவமணி (வயது 41). குருபீடபுரத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் இவர், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வசித்து வருகிறார்.
 இவருக்கு பல் வலி ஏற்பட்டதால் அதற்குசிகிச்சை பெற தனது மகன் ராஜ்குமாருடன் ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை தவமணி ஓட்டினார். 
பிரிதிவிமங்கலம் அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி எதிரே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் தவமணி அணிந்திருந்த 6 ¼ பவுன் நகையை பறித்தனர். 

வலைவீச்சு

இதில் பதறிய அவர் தனது மகனுடன் சேர்ந்து திருடன், திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story