சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கல்வி, தொழில் மேன்மை, அரசியல் மேன்மை உள்ளிட்டவைகளை வழங்கும் பிரம்ம வித்யாம்பிகை, இந்த கோவிலில் அம்மனாக அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலின் இந்திர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை சாமி - அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் நிர்வாக அதிகாரி முருகன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரை வடம் பிடித்து இழுத்தனர்
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவசிவ என சரணம் கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரைராஜன், சின்னப்பொண்ணு, தோட்டம் கிராம தலைவர் பாண்டியன், நாடி நிபுணர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து நேற்று மாலை நிலையத்தை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், குருமூர்த்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆதவன் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story