வேன் டிரைவர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது


வேன் டிரைவர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 3 March 2021 8:16 PM GMT (Updated: 3 March 2021 8:16 PM GMT)

வேன் டிரைவர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே வேன் டிரைவர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேன் டிரைவர்
அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது29). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு இரவு கம்பெனியில் நிறுத்தி இருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது சிக்கந்தர் சாவடியில் இருந்து பொதும்பு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து செல்போனை பறித்து கொண்டு கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
விசாரணை
 இதில் படுகாயம் அடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. சுதாகர் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார்  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
கைது
விசாரணையில். மதுரை செல்லூர் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அழகுபாண்டி (20), பாண்டி கார்த்திக் (20) என்பதும் இவர்கள் தான் கடந்த 21-ந் தேதி நடந்த கொலையில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம்குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story