ஆதார் அட்டை பெற காத்திருந்தவர்கள் ஊழியருடன் வாக்குவாதம்

ஜெயங்கொண்டத்தில் ஆதார் அட்டை பெற காத்திருந்தவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை வேண்டியும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டியும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை பதிவுக்காக தினமும் காலை 6 மணி முதலே காத்திருக்கின்றனர். இந்நிலையில் மையங்களுக்கு 30 டோக்கன் வீதம் கொடுப்பதால், பலரும் காத்திருந்தும் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஜெயங்கொண்டத்தில் வங்கி ஒன்றில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏராளமானவர்கள் காத்திருந்தனர். இருப்பினும் ஊழியர் மூலம் 30 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டதால், அங்கு காத்திருந்த மற்றவர்கள் தங்களுக்கும் டோக்கன் வழங்கக்கோரி, ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மன உளைச்சல்
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், தினமும் பல்வேறு வேலைகளுக்கு இடையில் ஆதார் அட்டை பெறுவதற்காக நாங்கள் வருகிறோம். ஆனால் இதோடு பலமுறை நாங்கள் திருப்பி அனுப்பப்படுகிறோம். வங்கியில் உள்ள இ-சேவை மையத்தில் விரைவாக ஆதார் அட்டை எடுத்து கொடுப்பதாலும், அரசு அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று அடிக்கடி கூறுவதாலும், அதிகமானவர்கள் வங்கியில் செயல்படும் இ-சேவை மையத்திற்கு வரும் நிலை உள்ளது. இதனால் ஒரே நாளில் அதிகமானவர்களுக்கு ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய முடியாத நிலையில் டோக்கன் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை பெறுவதில் ஏற்படும் சிரமம் காரணமாக, எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது, என்று தெரிவித்தனர். மேலும் அரசு அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் முறையாக பதிவு மேற்கொண்டு ஆதார் அட்டை வழங்கவும், அதிகப்படியான டோக்கன் வழங்கவும், அனைத்து நபர்களுக்கும் ஆதார் அட்டை கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






