கார்கள், மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.18 லட்சம் பறிமுதல்


கார்கள், மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.18 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 March 2021 8:49 PM GMT (Updated: 5 March 2021 8:49 PM GMT)

தா.பழூர், வேப்பந்தட்டை அருகே கார்கள், மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தா.பழூர்:

பறிமுதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் பறக்கும் படை அலுவலரான தாசில்தார் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், ஏட்டு தவசீலன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை அரியலூர் மாவட்ட எல்லை பகுதியான மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெய்வேலி நகரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் இருந்த ரத்தினாண்டவர்(வயது 60) என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், நெய்வேலியில் இருந்து கும்பகோணத்தில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதாகவும், அதற்கான தேவைக்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும், அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அந்த தொகைக்கு உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படை அலுவலர், அந்த பணத்தை பறிமுதல் செய்தார். மேலும் இது பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் கலைவாணனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி சுரேஷிடம், அந்த பணத்தை ஒப்படைத்தார்.
நிதி நிறுவன ஊழியர்கள்
இதேபோல் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டையை அடுத்த பூலாம்பாடி அரசு மருத்துவமனை அருகே உள்ள வேப்படி-பாலக்காடு சாலையில் நேற்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிவக்குமார், சுரேஷ், சாந்தி ஆகிய போலீசார் அடங்கிய தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அந்த சாலையில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த ரத்தினம் மகன் நல்லமுத்து (24), மற்றொருவர் தேவராஜ் என்பதும், அவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.63 ஆயிரத்து 767 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பெரம்பலூர் (தனி) தொகுதி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ‘சீல்' வைக்கப்பட்டு பெரம்பலூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.55 ஆயிரம்
மேலும் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உடும்பியம் கிராமத்தில் பறக்கும் படையை சேர்ந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் பாடாலூரை சேர்ந்த குமார் (39), திருச்சியை சேர்ந்த பேட்டரி கணேசன் (60) ஆகியோர் கொண்டு வந்த ரூ.55 ஆயிரத்துக்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பெரம்பலூர்  சப்-கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

Next Story