ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இருப்பு அறைகள் அமைப்பு

ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இருப்பு அறைகள் அமைக்கப்படுகிறது என்று தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 6-ந் தேதி பதிவாகும் வாக்குகள் அனைத்தும் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படவுள்ளது. இதையொட்டி கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தினையும், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு அறைகளையும் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள ஜெயங்கொண்டம் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான இருப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, தேர்தல் நடத்தும் அலுவலருக்கான அறை, பாதுகாப்பு அலுவலருக்கான அறை மற்றும் செய்தியாளர்களுக்கான ஊடக மையம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ள அரசியல் கட்சி முகவர்கள் ஆகியோருக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
மேலும், அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பிரசார வாகனத்தினை அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story






