உரிய ஆவணங்களின்றி கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்களின்றி கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 March 2021 1:25 AM IST (Updated: 7 March 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை அருகே உரிய ஆவணங்களின்றி கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தா.பழூர்:

வாகன சோதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட தா.பழூர் அருகே உள்ள அனைகுடம் பகுதியில் நேற்று காலை கண்காணிப்பு அலுவலர் சசிகுமார் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் விஜயகுமார், மகேந்திரன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் காஞ்சீபுரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் வந்தார்.
அவரது காரை நிறுத்தி, பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அதில், உரிய ஆவணம் இன்றி ரூ.60 ஆயிரம் ெகாண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் சார் நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி சுரேஷிடம் ஒப்படைத்தனர்.
ரூ.1 லட்சம்
இதேபோல் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் நான்கு ரோட்டில் நேற்று காலை, பெரம்பலூர் வட்டார வழங்கல் அலுவலர் பெரியண்ணன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீசார் கருப்பையா, ஜீவிதா ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருச்சி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பெரம்பலூர் தாசில்தார் சின்னத்துரையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ‘சீல்' வைக்கப்பட்டு பெரம்பலூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல்
மேலும் வேப்பந்தட்டை தாலுகா உடும்பியம் சோதனைச்சாவடியில் நேற்று மதியம், பெரம்பலூர் கனிமம் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீசார் பன்னீர்செல்வம், புவனேஸ்வரி ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.90 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த கோபிநாத், நவலூர்குட்டப்பட்டுவை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பெரம்பலூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
1 More update

Next Story