கொட்டும் பனியில் காமன் பண்டிகை கோலாகலம்


கொட்டும் பனியில் காமன் பண்டிகை கோலாகலம்
x
தினத்தந்தி 7 March 2021 5:30 PM GMT (Updated: 7 March 2021 5:35 PM GMT)

கூடலூர் அருகே கொட்டும் பனியில் காமன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.

கூடலூர்,

தமிழகத்தில் பண்டைய காலங்களில் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய கலைகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. நாளடைவில் பெரும்பாலான கலைகள் அழிவின் பிடியில் தள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் இதுவரை பாரம்பரிய கலைகளுடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

கூடலூர் அருகே ஆமைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய ரதி-மன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகையை கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது தாயகம் திரும்பிய மக்கள் விடிய, விடிய கோலாகலமாக கொண்டாடினர். இதில் குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தவத்தை கலைக்க திட்டம்

இதையொட்டி விநாயகர், சிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ரதி-மன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகை குறித்த புராண வரலாற்றை நினைவு கூரும் வகையில் பண்டிகை தொடங்கியது.

அதாவது பார்வதி தேவி தனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்துகொள்ள சிவனிடம் அனுமதி கேட்டார். அதற்கு சிவபெருமான் மறுத்துவிட்டார். தன்னை முறையாக அழைக்காமல் யாகம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கூறி அவரை சிவபெருமான் தடுத்தார். இருப்பினும் பார்வதி தேவி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டார். 

இதைத்தொடர்ந்து சிவபெருமான் கடும் தவத்தில் ஆழ்ந்தார். இருப்பினும் அழைப்பு விடுக்காத நிலையிலும் யாகத்தில் சிவபெருமான் தானாகவே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தட்சன் எண்ணினார். இதனால் மன்மதனை அனுப்பி சிவபெருமானின் தவத்தை கலைக்க திட்டமிட்டார். 

மன்மதன்-ரதி திருமணம்

அப்போது மன்மதனுக்கும், ரதிக்கும் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தது. எனினும் சிவபெருமானின் தவத்தை கலைத்து அழைத்து வர மன்மதனுக்கு தட்சன் உத்தரவிட்டார். இதனால் சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் புறப்பட்டார்.
இதை கண்ட ரதி, ஏற்கனவே நான் கண்ட கெட்ட கனவில் எமன் வந்ததாகக்கூறி சிவபெருமானின் தவத்தை கலைக்க செல்ல வேண்டாம் என்று மன்மதனை தடுத்தார். மேலும் அவ்வாறு செய்தால் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்தார். 

விடிய, விடிய...

ஆனால் அதை மீறி மன்மதன் சிவபெருமானின் தவத்தை கலைப்பதற்காக சென்றார். தொடர்ந்து தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி தவத்தை கலைத்தார். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான் வீரபத்திரராக உருமாறி மன்மதனை எரித்தார். 

இதை அறிந்த ரதி தனது கணவனை மீண்டும் உயிர்ப்பித்து தருமாறு சிவனின் கால்களில் விழுந்து கதறி அழுதார். இதனால் மனமிரங்கிய சிவன் மன்மதனை உயிர்த்தெழ செய்தார்.

இந்த நிகழ்வை சிவன், பார்வதி, தட்சன், ரதி, மன்மதன், வீரபத்திரர், எமன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்த கலைஞர்கள் கொட்டும் பனியில் விடிய, விடிய நடித்து விளக்கினர். இதனை அங்கு கூடியிருந்த திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.

நினைத்த காரியங்கள் கைகூடும்

இதுகுறித்து தாயகம் திரும்பிய மக்கள் கூறியதாவது:-
பண்டைய காலத்தில் பாரம்பரிய கலைகளுடன் பண்டிகைகளை முன்னோர் கொண்டாடி வந்தனர். பின்னர் தமிழகத்தில் இருந்து சென்ற மக்களால் இலங்கையிலும் கலைகள் பரவியது. 

நாளடைவில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் இதுவரை பாரம்பரிய பழக்க வழக்கங்கள், கலைகளை பின்பற்றி வருகின்றனர். அதில் ஒன்று ரதி-மன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகை ஆகும். மாசி மாதம் மூன்றாம் பிறை நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக 16 நாட்கள் விரதம் இருந்து வருகிறோம்.

அதன் பின்னர் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடத்தப்படும். தொடர்ந்து ரதி-மன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகை விடிய, விடிய நடைபெறும். விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. கூடலூர், பந்தலூர் தாலுகா மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் தாயகம் திரும்பிய மக்களால் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story