33 பவுன் நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை


33 பவுன் நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 7 March 2021 6:01 PM GMT (Updated: 2021-03-07T23:31:52+05:30)

வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
33 பவுன் நகைகள் கொள்ளை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த வாதாம்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜமன்னர். இவரது மனைவி ஆவாரம் (வயது51). இவர்களுக்கு ராஜேஷ்,  தினேஷ் ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி  ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலுக்கு ராஜமன்னர் தனது குடும்பத்துடன்  சென்று இருந்தார். 
அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 33  பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரேகாராணி (பொறுப்பு), போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 
மேலும்  திருவாரூர் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு  மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை. 
இதுகுறித்து ஆவாரம் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை  வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story