ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையால் சிரமத்திற்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள்

சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஜல்லிற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள சாலையால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த முனையதரையன் பட்டி கிராமத்தில் ஏரிக்கரை அருகே தார் சாலை சேதமடைந்தது. இந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது சாலை கொத்தி போடப்பட்டு, நிரவப்பட்டது. பின்னர் அந்த சாலை பணிகள் நடைபெறவில்லை. இதனால் கழுமங்கலம் மற்றும் முனையதரையன்பட்டி ஏரி கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முழுவதும் கொத்தி நிரவப்பட்ட நிலையில் உள்ளது.
இந்த சாலை வழியாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் பரணம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால், இந்த வழியாக செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கற்கள் குத்துகின்றன
மேலும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. கழுமங்கலம் மற்றும் முனையதரையன்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏரிக்கரை சாலையில் வாகனங்கள் வரும்போது டயரில் ஜல்லிக்கற்கள் குத்தி பஞ்சர் ஆகி விடுவதால், அவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களின் கால்களில் கற்கள் குத்தி காயமடைந்து அவதிப்படுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






