பெண் கல்வி கற்றால் குடும்பமும், சமுதாயமும் சிறந்து விளங்கும்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

பெண் கல்வி கற்றால் குடும்பமும், சமுதாயமும் சிறந்து விளங்கும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறினார்.
தாமரைக்குளம்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தின விழா அரியலூரில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் எழில் முன்னிலை வகித்தார். மகளிர் அணி துணைத்தலைவர் அருமைக்கண்ணு வரவேற்றார்.
விழாவில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது;-
மனிதர்களில் சிறந்தவர்களாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அனைத்து சாதனைகளுக்கும் பின்புலமாக பெண்களே உள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் ஆணைவிட ஒரு மடங்கு மேலாக பெண்களின் பங்களிப்பு உள்ளது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமும், சமுதாயமும் சிறந்து விளங்கும். ஒரு குழந்தை அறிவில் சிறந்து விளங்குவது அன்னை மற்றும் ஆசிரியர்களால்தான். இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மகளிர் தின விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் விருதுகளும், அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கினார். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






