பணம் பட்டுவாடாவை தடுக்க சேலம் சரகத்தில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி


பணம் பட்டுவாடாவை தடுக்க சேலம் சரகத்தில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி
x
தினத்தந்தி 7 March 2021 10:20 PM GMT (Updated: 2021-03-08T03:50:41+05:30)

பணம் பட்டுவாடாவை தடுக்க சேலம் சரகத்தில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:
பணம் பட்டுவாடாவை தடுக்க சேலம் சரகத்தில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்காலிக சோதனைச்சாவடி
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சேலம் சரகத்திற்கு 5 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது. இவர்கள் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க 33 பறக்கும் படையும், 33 நிலையான கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் தலா 6 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
சேலம் மாவட்டத்தில் நிலையான சோதனைச்சாவடிகளாக கொளத்தூர் மற்றும் தீவட்டிப்பட்டியில் தலா ஒரு சோதனைச்சாவடிகள் உள்ளது. இதுதவிர, மாவட்ட போலீசார் ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சோதனைச்சாவடிகளை ஏற்படுத்தி சோதனையிட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தொகுதிக்கு ஒரு தற்காலிக சோதனைச்சாவடியை ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 11 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடிகள் வழியாக வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து நிலையான கண்காணிப்பு குழுவினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
57 இடங்கள்
இதேபோல், தர்மபுரியில் 9 சோதனைச்சாவடிகளும், நாமக்கல்லில் 16 சோதனைச்சாவடிகளும், கிருஷ்ணகிரியில் 21 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைச்சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தி வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story