கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2021 12:11 PM GMT (Updated: 2021-03-08T17:41:54+05:30)

தேனியில் வனத்துறையினரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி:

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே இந்திராநகர், அரசரடி, பொம்மராஜபுரம், நொச்சிஓடை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

 இங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த மலைக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் டீசல் மோட்டார்களை அப்புறப்படுத்த வனத்துறையினர் வலியுறுத்தினர்.

 விவசாயிகள் அப்புறப்படுத்தாததால் கடந்த 6-ந்தேதி டீசல் மோட்டார்களை அகற்றுவதற்காக வனத்துறையினர் செல்ல முயன்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஞ்சனூத்து சோதனை சாவடியை மலைக்கிராம மக்கள் முற்றுகையிடடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மலைக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் வந்தனர். 

பின்னர் அவர்கள் வனத்துறையினரின் நடவடிக்கைகளை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
கோஷம் எழுப்பினர்


இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். 

இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு, காலம் காலமாக மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்றக்கூடாது என்றும், இதுதொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்து வருவதால் இறுதித்தீர்ப்பு வரும் வரை விவசாயிகளுக்கு வனத்துறையினர் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், வனத்துறையினரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

 சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு விவசாயிகள் சிலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story