டிரைவரை மிரட்டி லாரி கடத்தல்

ஆரோவில் அருகே டிரைவரை மிரட்டி லாரியை கடத்திச்சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி தாலுகா கலித்திராம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 33). இவர் வானூர் அருகே கடம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜவேலு (40) என்பவரிடம் டிப்பர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தொள்ளாமூர் முருகன் என்பவரின் செம்மண் குவாரியில் இருந்து மணிகண்டன், லாரியில் செம்மண் லோடு ஏற்றிக்கொண்டு புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிக்குளம் நடராஜன் என்பவருடைய வீட்டில் கொட்டி விட்டு அங்கிருந்து மீண்டும் கடம்பட்டுக்கு புறப்பட்டார்.
இடையஞ்சாவடி என்ற இடத்தில் வரும்போது லாரியை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 30 வயது மதிக்கத்தக்க 4 நபர்கள், திடீரென அந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் அவர்களில் 2 பேர் மட்டும் அந்த லாரியில் ஏறிக்கொள்ள, மற்ற 2 பேர் லாரியை பின்தொடர்ந்து தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்தனர். புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே வந்ததும் மணிகண்டனை மிரட்டியதோடு லாரியில் இருந்து அவரை கீழே இறக்கி விட்டு விட்டு அந்த லாரியை கடலூர் மார்க்கமாக கடத்திச் சென்று விட்டனர். இந்த லாரியின் மதிப்பு ரூ.21 லட்சமாகும்.
4 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை கடத்திச்சென்ற 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story