உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்


உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2021 3:48 PM GMT (Updated: 8 March 2021 3:48 PM GMT)

வானூர், விக்கிரவாண்டி பகுதியில் Seizure of Rs 3 lakhs, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வானூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் நல்லாவூர்புதூர் கூட்டுசாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ரூ.1½ லட்சம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 200 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், மரக்காணம் தாலுகா கீழ்சிவிரியை சேர்நத ஆனந்தராஜ் (வயது 26) என்பது தெரிந்தது.
மேலும் அவர், புதுச்சேரியில் ஜல்லி, மணல் சப்ளை செய்ததற்காக பணத்தை வசூல் செய்து கொண்டு மடந்தாங்கல் பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வானூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விக்கிரவாண்டி 

விக்கிரவாண்டி அருகே கெடார் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வெங்கடாஜலபதி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணன், ஏட்டுகள் ரமேஷ்குமார், கவுரி ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் ரூ.1½ லட்சம் இருந்தது. லாரியில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அம்ஜத் சல்மானி(37), குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யாதவ்(38) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், உரிய ஆவணமின்றி அந்த பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். 

Next Story