என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி,
நெய்வேலி வட்டம் 13 என்.எல்.சி. குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் முருகேசன் (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முருகேசன் தனது வீட்டிற்கு அருகில் காலியாக இருந்த வீட்டின் முன்புறம் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் கதறி அழுததோடு, இதுபற்றி நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கந்துவட்டி கேட்டு மிரட்டலா?
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகேசனின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில் எனக்கு கடன் கொடுத்தவர்கள், தற்போது கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்கள் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முருகேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்துவட்டி கொடுமையால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை செய்துகொண்டதாக பரவிய தகவலால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story