நெல்லை மாவட்டத்துக்கு கூடுதலாக 176 துணை ராணுவத்தினர் வருகை


நெல்லை மாவட்டத்துக்கு கூடுதலாக 176 துணை ராணுவத்தினர் வருகை
x
தினத்தந்தி 8 March 2021 8:30 PM GMT (Updated: 8 March 2021 8:30 PM GMT)

நெல்லை மாவட்டத்துக்கு கூடுதலாக 176 துணை ராணுவத்தினர் வந்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்துக்கு கூடுதலாக 176 துணை ராணுவத்தினர் நேற்று வந்தனர். 

சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 164 துணை ராணுவ வீரர்கள் நெல்லை மாவட்டத்திற்கு வந்தனர். அதில் நெல்லை புறநகர் பகுதிக்கு 84 பேரும், மாநகர பகுதிக்கு 80 பேரும் என பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனர். 

கூடுதலாக துணை ராணுவ வீரர்கள்

இந்த நிலையில் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் நெல்லை மாவட்டத்திற்கு வந்தனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி ராகேஷ் குமார் தலைமையில் 176 மத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் ரெயில் மூலம் மதுரைக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து போலீஸ் வேன் மூலம் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வந்த வீரர்களை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வரவேற்றார். இதில் நெல்லை மாநகர பகுதிக்கு 92 பேரும், புறநகர் பகுதிக்கு 84 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் முக்கிய ஊர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். துணை ராணுவ வீரர்கள் போலீசாருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்கள். 



Next Story