அறச்சலூர் அருகே பயங்கரம் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது; மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்


அறச்சலூர் அருகே பயங்கரம் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது; மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
x

அறச்சலூர் அருகே மது குடித்ததை தட்டிக்கேட்டதால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

அறச்சலூர்
அறச்சலூர் அருகே மது குடித்ததை தட்டிக்கேட்டதால்  தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடிப்பழக்கம்  
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி (47). இவர்களுடைய மகன்கள் மோகன சங்கர் (29). தீனதயாளன் என்கிற வேலு (27). 2 மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை. 
இதில் மோகன சங்கர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தங்கி இருந்து கூலிவேலை செய்து வருகிறார். இதனால் தீனதயாளன் தனது பெற்றோருடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்து உள்ளார். மேலும் தீனதயாளனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 
கொலை
இதேபோல் நேற்று முன்தினம் இரவு தீனதயாளன் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது அவரிடம் தந்தை சங்கர், ‘ஏன் குடித்துவிட்டு வருகிறாய். உனக்கு கல்யாணம் பண்ண வேண்டி உள்ளது. எனவே நீ குடிக்காதே,’ என தட்டிக்கேட்டதுடன், அறிவுரையும் கூறி உள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் தீனதயாளன் ஆத்திரம் அடைந்து சங்கரை தாக்கியதுடன் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த சங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
மகன் கைது
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு      அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தீனதயாளனை கைது செய்தனர். 
மது குடிப்பதை தட்டிக்கேட்ட தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story