மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி


மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 9 March 2021 3:24 PM GMT (Updated: 9 March 2021 3:24 PM GMT)

தேனியில் சட்டமன்ற தொகுதிகளுக்கான, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.


தேனி:


தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 40 பேர், பெரியகுளம் தொகுதிக்கு 41 பேர், போடி தொகுதிக்கு 35 பேர், கம்பம் தொகுதிக்கு 39 பேர் என மொத்தம் 155 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மண்டல தேர்தல் அலுவலர்களாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.


உடனுக்குடன் தகவல்


இந்த பயிற்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசியதாவது:-


மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். 

வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும்.


தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடப்பதற்கு முன்பாக நடக்கக்கூடிய நிகழ்வுகளை கண்காணித்து அந்த தகவல்களை காலதாமதமின்றி உடனுக்குடன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கண்காணிப்பு அலுவலகத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.

 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு தொடர்பான அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.


தேர்தலின் போது கொரோனா பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை வாக்காளர்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தியாகராஜன், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Next Story
  • chat