உடுமலை, குடிமங்கலம் பகுதியில் நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


உடுமலை, குடிமங்கலம் பகுதியில் நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர்  சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 March 2021 3:47 PM GMT (Updated: 9 March 2021 3:47 PM GMT)

உடுமலை, குடிமங்கலம் பகுதியில் சாக்கடை கழிவுகளை நீர் நிலைகளில் கலப்பதால் நீர் ஆதாரங்கள் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை, குடிமங்கலம் பகுதியில் சாக்கடை கழிவுகளை நீர் நிலைகளில் கலப்பதால் நீர் ஆதாரங்கள் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீர்நிலைகள் பாதுகாப்பு
உண்ண உணவு, குடிக்க சுத்தமான குடிநீர், சுவாசிக்க தூய்மையான காற்று ஆகிய மூன்றும் அனைத்து உயிர்களும் பூமியில் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளாகும். இதில் உணவு உற்பத்தி, சுத்தமான காற்றைத் தரும் மரங்கள் வளர்ப்பு என இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்ய தண்ணீர் உதவுகிறது. எனவே மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் தண்ணீரைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சமீப காலங்களாக நாகரிக வளர்ச்சியால் நீர் நிலைகள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
அதிலும் பல கிராமங்களில் சாக்கடைக் கழிவுநீரை நீர் நிலைகளில் கலப்பதால் நீராதாரங்கள் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வீடுகளில் குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் நிலை என்று உருவானதோ அன்று முதல் நீர் நிலைகளின் பாதுகாப்பும் பராமரிப்பும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. தங்களது குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் தங்கள் மற்ற பயன்பாட்டுக்கும் நீர் நிலைகளை மட்டுமே நம்பியிருந்த நிலை மாறிவிட்டதால் அவற்றைப் பராமரிப்பதில் அலட்சியப் போக்கு மேலோங்கி விட்டது.
உப்பாறு ஓடை
ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பது உள்ளாட்சி நிர்வாகங்கள் கடமையாகும். ஆனால் உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள பல ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகள் மட்டுமல்லாமல் உடுமலை நகராட்சி பகுதிகளிலும் வீடுகளில் சேகரமாகும் சாக்கடைக் கழிவு நீர் நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. அந்தவகையில் குடிமங்கலம் ஒன்றியத்தின் பல கிராமங்களைக் கடந்து உப்பாறு அணையில் கலக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது. உப்பாறு ஓடையாகும். இந்த ஓடை பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டும் புதர்கள் மண்டியும் பாழாகி வருகிறது. 
இதனால் மழைக் காலங்களில் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு உப்பாறு அணைக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில் குடிமங்கலம் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுகள் பல இடங்களில் நேரடியாக உப்பாறு ஓடையில் கலக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் தேங்கி உப்பாறு ஓடை முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் பல்வேறு சுகாதாரக் கேடுகளுக்கும் காரணமாகி விடுகிறது. பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே சாக்கடைக் கழிவுகளை ஓடையில் கலக்கும் அவலம் இங்கு அரங்கேறி வருகிறது.
அக்கறை 
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைக் கொண்டு நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வீடுகள் தோறும் தனி நபர் உறிஞ்சு குழிகள் அமைத்து அதன் மூலம் கழிவு நீர் வெளியேற்றத்தைத் தடுக்கலாம். மேலும் சாக்கடைக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் கழிவு நீரை பூமிக்குள் செலுத்தும் விதமாக பொது உறிஞ்சு குழிகள் அமைத்தல் போன்ற பணிகளை முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உப்பாறு ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளிலோ அல்லது நீர் நிலைகளின் கரைகளிலோ குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை பெண்களுடன் ஒப்பிட்டு போற்றிப் பாதுகாத்தவர்கள் நமது முன்னோர்கள். எனவே நீர்நிலைகள் பாதுகாப்பில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர்கள்  கூறினர்.

Next Story