6 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு


6 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 9 March 2021 6:20 PM GMT (Updated: 9 March 2021 6:20 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.
குலுக்கல் முறையில் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குலுக்கல் முறையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தேர்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர இருப்பு கிடங்கில் 3,631 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,764 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 2,982 விவிபேட் எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த எந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் பரிசோதனை செய்ததன் அடிப்படையில் சரியாக இயங்காத 19 வாக்குப்பதிவு எந்திரங்கள், 92 கட்டுப்பாட்டு கருவிகள், 175 விவிபேட் எந்திரங்கள் நிராகரிக்கப்பட்டு, தனியாக வைக்கப்பட்டன.
செயல் விளக்கம்
6 சட்டசபை தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிப்பதற்காகவும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் 100 வாக்குப்பதிவு எந்திரங்கள், 100 கட்டுப்பாட்டு கருவிகள், 100 விவிபேட் எந்திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் 3,512 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,572 கட்டுப்பாட்டு கருவிகள், 2,707 விவிபேட் எந்திரங்கள் மற்றும் திருவள்ளூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 80 விவிபேட் எந்திரங்கள் இருப்பு இருந்தன.
சட்டசபை தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 342 வாக்குச்சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 377 வாக்குச்சாவடிகளும், பரமத்திவேலூர் தொகுதியில் 317 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் 358 வாக்குச்சாவடிகளும் என தற்போது மொத்தம் 2 ஆயிரத்து 49 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
விவிபேட் எந்திரங்கள்
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் கூடுதலான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் எந்திரங்களும் அனுப்பப்பட உள்ளன.
அதன் அடிப்படையில் ராசிபுரம் தொகுதிக்கு 399 வாக்குப்பதிவு எந்திரங்கள், 399 கட்டுப்பாட்டு கருவிகள், 432 விவிபேட் எந்திரங்களும், சேந்தமங்கலம் தொகுதிக்கு 411 வாக்குப்பதிவு எந்திரங்கள், 411 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 445 விவிபேட் எந்திரங்களும், நாமக்கல் தொகுதிக்கு 453 வாக்குப்பதிவு எந்திரங்கள், 453 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 491 விவிபேட் எந்திரங்களும், பரமத்தி வேலூர் தொகுதிக்கு 381 வாக்குப்பதிவு எந்திரங்கள், 381 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 413 விவிபேட் எந்திரங்களும், திருச்செங்கோடு தொகுதிக்கு 388 வாக்குப்பதிவு எந்திரங்கள், 388 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 420 விவிபேட் எந்திரங்களும், குமாரபாளையம் தொகுதிக்கு 430 வாக்குப்பதிவு எந்திரங்கள், 430 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 466 விவிபேட் எந்திரங்களும் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் தேர்வு செய்யப்பட்ட எந்திரங்களின் வரிசை எண்கள் அடங்கிய பட்டியல் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் வழங்கப்பட்டது.
அனுப்பி வைக்கப்பட்டன
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் இருந்து சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு எந்திரங்களை அனுப்பும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், சக்திவேலு, மோகனசுந்தரம், மரகதவள்ளி, ரமேஷ், தேர்தல் தாசில்தார்கள் திருமுருகன், சுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story