வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஊர்வலம் மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது


வாக்களிப்பதன் அவசியம் குறித்து   வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஊர்வலம்  மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது
x
தினத்தந்தி 9 March 2021 6:44 PM GMT (Updated: 9 March 2021 6:44 PM GMT)

வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

விராலிமலை:
மாரத்தான் ஓட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை இலக்காக கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. பொது அலுவலக வளாகத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
இதில் விளையாட்டு வீரர்கள், துணை ராணுவப்படையினர், போலீசார், நகராட்சி ஊழியர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த தொடர் ஓட்டம் கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்குராஜ வீதி, மேலராஜ வீதி, சத்தியமூர்த்தி சாலை, ஜல்லிக்கட்டு சிலை, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பொது அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. இதில் புதுக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்கோட்டாட்சியருமான டெய்சிகுமார், துணை கலெக்டர் (பயிற்சி) சுகிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
கைெயழுத்து இயக்கம் 
விராலிமலை புதிய பஸ் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான தண்டாயுதபாணி தலைமை தாங்கி வலுவான ஜனநாயகத்துக்கு பெருமளவில் பங்கேற்று அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெற்றால் தண்டனை ஒரு வருடம் ஜெயில். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும் என பேசினார். 
விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டு சென்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு ஊர்வலம்
ஆவுடையார்கோவிலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வருவாய்த்துறையினர் சார்பில் தாசில்தார் சிவகுமார் தலைமையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
அமரடக்கி ஊராட்சி மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி ராஜா தலைமையில், பொதுமக்களுக்கு ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 
பொன்னமராவதி 
பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் ஜெயபாரதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் தனி வட்டாட்சியர் சங்கரகாமேஸ்வரன், துணை வட்டாட்சியர்கள் பிரகாஷ் சேகர், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டு போடுவது எப்படி என்பது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்விளக்க முகாம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விளக்கம் அளித்தனர். அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இதேபோல் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கானக் கூட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டிற்கான 12-டி படிவம் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story