மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 9 March 2021 7:04 PM GMT (Updated: 9 March 2021 7:04 PM GMT)

4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

சிவகங்கை,

4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைசட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மதுசூதன் ரெட்டி தலைமையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையிலும் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்களிக்கும் விவரம் குறித்த கருவி ஆகியவை சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
அனுப்பி வைப்பு
தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாகவும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்களிக்கும் விவரம் குறித்த கருவி ஆகியவை அனைத்துகட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதன்படி, காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 532 வாக்குப்பதிவு எந்திரங்களும், 532 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 576 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1,640 எந்திரங்களும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 492 வாக்குப்பதிவு எந்திரங்களும், 492 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 533 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1,517 எந்திரங்களும், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 513 வாக்குப்பதிவு எந்திரங்களும், 513 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 556 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1,582 எந்திரங்களும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 479 வாக்குப்பதிவு எந்திரங்களும், 479 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 519 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என 1,477 எந்திரங்களும் என மொத்தம் 6,216 மின்னணு எந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வைத்து சீல் இடப்பட்டு காவல்துறையின் மூலம் முழு கண்காணிப்பில் இருக்கும். வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் வரை பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், மானாமதுரை (தனி) சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், துணை ஆட்சியர் பயிற்சி கீர்த்தனா, வட்டாட்சியர்கள் கந்தசாமி, தர்மலிங்கம், மாணிக்கவாசகம், ஆனந்த், ரெத்தினவேல்பாண்டியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப்பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story