பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாடகை வாகன உரிமையாளர்கள்- டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  வாடகை வாகன உரிமையாளர்கள்- டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2021 7:40 PM GMT (Updated: 9 March 2021 7:40 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாளையங்கோட்டையில் வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாளையங்கோட்டையில் வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அனைத்து வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் சார்பில், பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க தலைவர் சந்தோசம் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் துரை முன்னிலை வகித்து, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு

பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். வாடகை கார் ஓட்டுனர்கள், ஒர்க் ஷாப் பணியாளர்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் நான்கு வழிச்சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை உடனே பராமரிக்க வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இல்லையெனில் சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும். 

வாடகை வாகனங்களுக்கு சீட் மட்டும் டூரிஸ்ட் பர்மிட் வழங்க வேண்டும்.
வாகனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் இன்சூரன்ஸ் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். புதிய வாகனம் வாங்கும்போது சாலை வரிகள் செலுத்தப்படுகிறது. சாலையில் பயணம் செய்யும் போதும் சுங்கவரி வசூல் நடக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story