கும்பகோணம் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.4,200 லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் பறிமுதல்

கும்பகோணம் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.4,200 லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2021 7:52 PM GMT (Updated: 9 March 2021 7:52 PM GMT)

கும்பகோணம் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.4,200 லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பனந்தாள்:-
கும்பகோணம் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.4,200 லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 
நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 47). விவசாயி. இவர், தனது 16 ஏக்கர் வயலில் நெல் சாகுபடி செய்து இருந்தார். 
வயலில் விளைந்த 116 நெல் மூட்டைகளை விற்பதற்காக கும்பகோணம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த மாதம்(பிப்ரவரி) 14-ந் தேதி கொண்டு சென்றார். அவரிடம் கொள்முதல் நிலைய ஊழியர்கள், கடந்த 6-ந் தேதி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாக கூறினர். 
மூட்டைக்கு ரூ.40 லஞ்சம்
மேலும் ஊழியர்கள், பாஸ்கரனிடம் மூட்டைக்கு ரூ.40 வீதம் 8-ந் தேதி லஞ்சம் கொடுத்தால், நெல்லுக்கான பணம் வங்கி கணக்கில் ஏறும் என கூறி உள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாஸ்கரன் இதுகுறித்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் நேற்று புகார் செய்தார். 
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் மற்றும் போலீசார் காமாட்சிபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று மதியம் மறைந்து இருந்து கண்காணித்தனர். 
கணக்கில் வராத பணம்
அப்போது பாஸ்கரன், போலீசார் கூறியபடி ரசாயனம் தடவப்பட்ட ரூ.4,200-ஐ நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் கேசவமூர்த்தியிடம்(38) கொடுத்தார். 
இதையடுத்து கேசவமூர்த்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.30 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story