கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.7½ லட்சம் சிக்கியது
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 710 கைப்பற்றப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், நெல்லூரில் இருந்து உரிய ஆவணங்களின்றி காரில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கவரைப்பேட்டை அடுத்த அய்யர்கண்டிகை கிராமத்தில் கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 ஆயிரத்து 500, ஊத்துக்கோட்டை தாலுகா சீதஞ்சேரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி மினி சரக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று ஒரே நாளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 4 பேரிடம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 710 பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குமார், மகேஷ் ஆகியோர் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி சார்-கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story