நாமக்கல்லில் மினி மாரத்தான்


நாமக்கல்லில் மினி மாரத்தான்
x
தினத்தந்தி 11 March 2021 6:42 AM IST (Updated: 11 March 2021 7:02 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாமக்கல்லில் நேற்று மினி மாரத்தான் நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

சட்டசபை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் மினி மாரத்தான் நடந்தது. இதில் ஆண்களுக்கு 10 கி.மீட்டர் தூரமும், பெண்களுக்கு 6 கி.மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து மினி மாரத்தானை மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் 600 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பியும், பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் சென்றனர். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வீரர், வீராங்கனைகள் வாக்காளர் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

ஆண்களுக்கான மினி மாரத்தானில் நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சூர்யா முதல் இடத்தையும், வளையப்பட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் 2-வது இடத்தையும், செல்வம் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர் நீலகண்டன் 3-வது இடத்தையும் பிடித்தனர். 
பெண்களுக்கான மினி மாரத்தானில் செல்வம் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி நித்தின் முதல் இடத்தையும், வினிதா, கலைசெல்வி ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடங்களையும் பிடித்தனர். வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தநாராயணன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், நாமக்கல் தாசில்தார் தமிழ்மணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story