சேலம் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.19 லட்சம் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.19¼ லட்சமும், 79½ கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளிலும் பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி மற்றும் மேட்டூர் ஆகிய 11 தொகுதிகளிலும் மொத்தம் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 11 வீடியோ பார்வையிடும் குழுக்கள், கணக்கு குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கத்தை எடுத்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் உரிய ஆவணங்களோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் மேற்குறிப்பிட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நேற்று காலை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.19 லட்சத்து 26 ஆயிரத்து 372 ரொக்கமும், ரூ.38 லட்சத்து 24 ஆயிரத்து 950 மதிப்பிலான 79.58 கிலோ கிராம் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story