ஊட்டி, கோத்தகிரியில் பலத்த மழை
ஊட்டி, கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. மேலும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறைபனி தாக்கம் காணப்பட்டது. சமீபத்தில் பகலில் வெயில் மற்றும் மேகமூட்டம் என மாறுபட்ட காலநிலை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
குந்தா, கெத்தை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பனி தாக்கத்தில் காய்கறி பயிர்கள், தேயிலை செடிகள் கருகி வந்த நிலையில், மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோத்தகிரி மற்றும் குன்னூரில் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கோத்தகிரியில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குயின்சோலை பகுதியில் நீரோடை கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கரிக்கையூரில் சரக்கு வாகனம் நீரோடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அவற்றை நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு உரிமையாளர்கள் போராடி மீட்டனர். ஆனால் அவை பலத்த சேதம் அடைந்து இருந்தன.
இதற்கிடையில் கோத்தகிரியில் இருந்து இடுக்கொரை செல்லும் சாலையில் வேரோடு மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர்.
காவிலோரை பகுதியில் நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த மலைக்காய்கறிகள் சேதம் அடைந்தன. மேலும் அவை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சாலையில் கிடந்தன.
இதை கண்ட விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
ஊட்டி-3.4, குந்தா-41, எமரால்டு-7, அவலாஞ்சி-9, கெத்தை-42, கிண்ணக்கொரை-26, பாலகொலா -32, குன்னூர்-55, பர்லியார்-50, உலிக்கல்-25,
எடப்பள்ளி-82, கோத்தகிரி-120, கீழ் கோத்தகிரி-44 என்பது உள்பட மொத்தம் 624.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 21.53 மி.மீ. ஆகும். அதிகபட்சமாக கோத்தகிரியில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
Related Tags :
Next Story