எருமப்பட்டி அருகே தொழிலாளி அடித்துக்கொலை? போலீசார் விசாரணை
எருமப்பட்டி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எருமப்பட்டி,
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தாமரைகண்ணன் (வயது 21). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தாமரைகண்ணன் பொட்டிரெட்டிப்பட்டிக்கு வந்தார். பின்னர் பொட்டிரெட்டிப்பட்டி புதூர் பங்களா தெருவை சேர்ந்த மதியழகன் மகன் முரளியுடன் (26) வெளியே சென்றார்.
இரவில் இவர்கள் 2 பேரும் பொட்டிரெட்டிப்பட்டி புதூரில் உள்ள சிக்கண்ணன் கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லேசாக மழை பெய்தது. இதனால் அவர்கள் அங்குள்ள மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர்.
விசாரணை
இதனிடையே திடீரென முரளி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கு மயங்கிய நிலையில் கிடந்த தாமரைகண்ணன் மற்றும் முரளியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தாமரைகண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனிடையே முரளிக்கு கண்பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
அடித்துக்கொலை?
தொழிலாளி தாமரைகண்ணன் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைகண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது மின்னல் தாக்கி பலியானாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story