திருத்தணியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.3¼ லட்சம் சிக்கியது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருத்தணியில் கண்காணிப்பு குழு அதிகாரி அண்ணாதுரை தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட வேன் ஒன்று வேகமாக வந்தது. அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் திருப்பதியை சேர்ந்த திருமண கோஷ்டி பெண்கள் 7 பேர், ஆண்கள் 5 பேர் என 12 பேர் இருந்தனர். இவர்கள் திருப்பதியில் இருந்து திருமணத்திற்கு பட்டு சேலை எடுப்பதற்காக காஞ்சீபுரம் செல்வதாக தெரிவித்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 500 இருந்தது. அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் இது குறித்து திருத்தணி தொகுதி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ. சத்யாவிடம் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் கைப்பற்றப்பட்ட பணம் திருத்தணி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருமணத்திற்காக பட்டு சேலை எடுக்க வந்து கண்காணிப்பு குழுவினரிடம் பணத்தை பறிகொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story