சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் ராமன் வேண்டுகோள்


சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் ராமன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 March 2021 11:45 AM IST (Updated: 12 March 2021 11:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி கோலம் மற்றும் மெகந்தி வரைந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்திட வேண்டும் என்பது குறித்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்கள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம், விழிப்புணர்வு உறுதிமொழி, கலை நிகழ்ச்சிகள், கையெழுத்து இயக்கம், ரங்கோலி,  மெகந்தி வரைவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ஓட்டுப்பதிவு நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி அன்று வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும். மேலும், சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை  மேற்கொள்ள அனைவரும் உறுதி ஏற்று வாக்களிக்கும் ஜனநாயக கடமையை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். நாம் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம். நாம் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம். வாக்களிப்பது எனது உரிமை. வாக்களிப்பது எனது கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக கல்லூரி மாணவிகள் அனைவரும் தேர்தலில் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர ஸ்கூட்டரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சேலம் உதவி கலெக்டர் மாறன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன், அஸ்தம்பட்டி உதவி ஆணையர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story