சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது 11 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கு கடும் கட்டுப்பாடு


சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது 11 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கு கடும் கட்டுப்பாடு
x
தினத்தந்தி 12 March 2021 12:02 PM IST (Updated: 12 March 2021 12:04 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேலம்,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் 11 இடங்களில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும், மேட்டூருக்கு துணை கலெக்டர் அலுவலகத்திலும், சங்ககிரிக்கு உதவி கலெக்டர் அலுவலகத்திலும், சேலம் தெற்கு தொகுதிக்கு அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திலும், வீரபாண்டி தொகுதிக்கு உத்தமசோழபுரம் வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மைய அலுவலகத்திலும் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் நடக்கும் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் வர வேண்டும். கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் புதிதாக இணையவழி மூலமாகவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, இணையவழி மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு  இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து, பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story