தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்துக்கான வாக்குறுதிகள் என்ன?


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்துக்கான வாக்குறுதிகள் என்ன?
x
தினத்தந்தி 14 March 2021 11:59 AM IST (Updated: 14 March 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு தனித்தனியாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் சென்னை மாவட்டத்துக்கு 111 வாக்குறுதிகளும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 42 வாக்குறுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 16 வாக்குறுதிகளும், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 45 வாக்குறுதிகளும் தனித்தனியாக அளிக்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-

சென்னை

* சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு நகருக்கு வெளியே அமைக்கப்படும்.

* காசிமேடு அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.

* 3-வது ரெயில் முனையம் தண்டையார்பேட்டையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிப்பாக்கம் ஏரியில் படகு குழாம் அமைக்கப்படும்.

* தியாகராயநகர், கண்ணகி நகர், செம்மஞ்சேரி, வேளச்சேரி, மூலக்கடை, மாதவரம், மதுரவாயல், நொச்சிக்குப்பத்தில் அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்படும்.

* சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேளச்சேரி ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு படகு சவாரி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.

* மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் டோல்கேட் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரப்படும்.

* சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக ஏரி ஒன்று உருவாக்கப்பட ஆவண செய்யப்படும் என்பது உள்பட 111 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு

* வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் நிலம் பாதுகாக்கப்படுவதுடன் சர்வதேச பறவைகளும், சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்திடும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* செங்கல்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி, பல்நோக்கு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும்.

* தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

* மெட்ரோ ரெயில் சேவை மீனம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை நீட்டிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* பறக்கும் ரெயில் சேவை வேளச்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு நீட்டிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* செங்கல்பட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்பது உள்பட 16 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர்

* திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிகள் நவீனப்படுத்தப்படும். பொன்னேரியில் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் கட்டப்படும்.

* கும்மிடிப்பூண்டி, திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். பூந்தமல்லிக்கு வெளியே குப்பைக்கிடங்கு அமைக்கப்படும்.

* மெட்ரோ ரெயில் சேவை அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராமுக்கு விரிவுப்படுத்துவதோடு, திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* தண்டலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்படும். ஆரணியில் மாணவிகளுக்கு என்று தனியாக அரசு விடுதி கட்டப்படும்.

* ஆவடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். அரசு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கப்படும்.

* திருவள்ளூர் பஸ் நிலையம் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்பது உள்பட 42 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம்

* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். வண்டலூரில் துணைநகரம் அமைக்கப்படும்.

* வேளச்சேரியில் இருந்து மாமல்லபுரத்துக்கு பறக்கும் விரைவு ரெயில்திட்டம் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

* மெட்ரோ ரெயில் சேவை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு விரிவுபடுத்தப்படும்.

* உத்திரமேரூரிலும், காஞ்சீபுரத்திலும் நகரங்களுக்கு வெளியே புதிய பஸ்நிலையங்கள் அமைக்கப்படும்.

* காஞ்சீபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரியும், அரசு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும்.

* கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட ஆலந்தூர் தொகுதி திரிசூலம், தலக்கணாஞ்சேரி பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் தேங்கி உள்ள நீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட 45 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

Next Story