ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி


ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 March 2021 6:55 PM GMT (Updated: 16 March 2021 7:01 PM GMT)

கோவையில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோவை,

வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் தங்களது பணத்தை வங்கியில் போடமுடியாமல் தவித்தனர். மேலும் காசோலைகளுக்கான பணத்தை எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

ஏ.டி.எம்.களில் பணம் இல்லை 

கடந்த 4 நாட்களாக வங்கிகள் இயங்காததால் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் வைக்கப்பட்டிருந்த பணம் காலியாகி விட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

ஒருசில ஏ.டி.எம்.களில் மட்டும் பணம் இருந்தது. அந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். கோவை ரெயில் நிலையம் வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.கள் பணம் இன்றி காலியாக இருந்தன. இதனால் ரெயில் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து  2-வது நாளாக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆர்.எஸ்.புரம் கனரா வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். 

மேத்சன், பரணீதரன், சிவக்குமரன், ஸ்ரீமரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மீனாட்சி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ரூ.1000 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு 

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறும்போது, பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் கல்விக்கடன், விவசாயக்கடன் தனியார் வங்கிகளில் பெறுவது கடினமாக இருக்கும். 

ஏழைகளுக்கு வங்கி சேவை கிடைக்காது. கோவை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரூ.1,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது என்றனர். 


Next Story