சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க மலைவாழ் மக்கள் முடிவு


சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க மலைவாழ் மக்கள் முடிவு
x
தினத்தந்தி 16 March 2021 8:16 PM GMT (Updated: 16 March 2021 8:16 PM GMT)

சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க மலைவாழ் மக்கள் முடிவு

தளி
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை  வழங்காததால்வரும்  சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க மலைவாழ் மக்கள் முடிவு செய்துள்ளனர். 
மலைவாழ் மக்கள் 
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் பொறுப்பாறு, கோடந்தூர், ஆட்டு மலை, ஈசல் தட்டு, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஒரு சில அடிப்படை வசதிகளை வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து செய்து கொடுத்து உள்ளனர். 
ஆனாலும் கல்வி, சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி போன்றைவை போதுவான அளவு இல்லை. மேலும் வீடுகள் மற்றும் சாகுபடி செய்யும் விவசாய நிலங்களுக்கு பட்டா, உள்ளாட்சியில் வாக்குரிமை உள்ளிட்டவை கொடுக்கப்படவில்லை. பட்டா மற்றும் இதர வசதிகள் கேட்டு மலை வாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர். 
  இதுகுறித்து மலைவாழ்மக்கள் கூறியதாவது:-
தேர்தலை புறக்கணிக்க முடிவு 
அடர்ந்த மலைவாழ் குடியிருப்புகளில் வசித்து வருகின்ற அனைவரும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இதுவரையிலும் அதிகாரிகள் பெற்றுத் தரவில்லை. இதனால் அரசு அறிவிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Next Story