நத்தம் விசுவநாதன் சூறாவளி பிரசாரம் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி வாக்குசேகரிப்பு
நத்தம் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி நத்தம் விசுவநாதன் சூறாவளி பிரசாரம் செய்து வாக்குசேகரித்தார்.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க-. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திறந்த ஜீப்பில் நின்று இரட்டை இலை சின்னத்திற்கு பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை கொண்டு வந்தது அம்மாவின் அர சாகும். நான் தொலைநோக்கு பார்வையோடு நத்தம் பகுதி மக்களுக்காக செயல்பட்டு வருகிறேன். நத்தம் பகுதியில் உப மின் நிலையங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாய மின்மோட்டார் களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். ஏற்கனவே நான்கு முறை நத்தம் தொகுதியில் வெற்றி பெற செய்தது போல் இந்த முறையும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.
நத்தம் பேரூராட்சி பகுதிக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் ஏற்கனவே பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மத்திய அரசு அனுமதியுடன் லிங்கவாடி- மலையூர், குட்டுப் பட்டி- மலையூர் பகுதிகளில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், நத்தம் பேரூராட்சி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் மின் மயானம் அமைக்கப்படும், நத்தத்திற்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். மகளிர் குழு கடன்கள் நத்தம் பகுதியில் ரூ.52 கோடி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு இலவசம், அரசு மாதந்தோறும் வழங்கும் ஆயிரத்து 500 ரூபாயில் குடும்ப தலைவிகள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி காலையில் சோலார் அடுப்பில் சமையல் செய்வ துடன், இரவில் இலவச கேஸ் மூலமும் சமையல் செய்யலாம்.
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும், சத்தான பாலும் வழங்கப்பட இருப்பதால் தாய்மார் களின் காலை நேர பரபரப்பு குறையும். மேலும் கிராமப்புறங்களில் வீட்டு மனை இல்லாத நபர்களுக்கு இடத்தோடு வீடும், வீட்டு மனை உள்ளவர்களுக்கு பசுமைவீடு கட்ட கூடுதல் தொகையும் வழங்கப்படும். ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுபோன்ற அ.தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதி கள் அனைத்தையும் நிறை வேற்றிட உங்கள் முழுமையான ஆதரவை தந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தொடர்ந்து வெற்றியை தேடி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நத்தம் விசுவ நாதன் பேசினார். தொடர்ந்து சேர்வீடு, துவராபதி, செல்லம்புதூர், எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர், பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை உள்ளிட்ட 25 கிராம பகுதிகளில் நத்தம் விசுவநாதன் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சின்னு, நகர் செயலாளர் சிவலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர் பார்வதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி.
மேலும் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் ஆசை, நகர்பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மோகன்பாபு, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அம்சவள்ளி,தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கண்ணன், மின்சார வாரிய முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் குப்பான் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story