ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த காட்டு யானைக்கு சாடிவயல் முகாமில் சிகிச்சை
ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த காட்டு யானைக்கு சாடிவயல் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேரூர்,
கோவை நவக்கரை அருகே வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு திரும்பிய காட்டு யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் 28 வயதான ஆண் காட்டு யானை படுகாயம் அடைந்தது.
தலை, இடுப்பு உள்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதால் அந்த யானையால் நடக்க முடியவில்லை. இதையடுத்து அங்கேயே படுத்த நிலையில் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அதன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த யானையை சாடிவயல் முகாமுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. நள்ளிரவில் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த யானையை தூக்கி லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அந்த யானை சாடிவயல் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அந்த யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருவதுடன், தர்ப்பூசணி, வெல்லம், ஆகியவற்றை உணவாக கொடுத்து வருகிறார்கள். அதுபோன்று ஊசி மூலம் மருந்தும் ஏற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, காயம் அடைந்த காட்டு யானையை காப்பாற்ற தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் அதன் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story