மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: இண்டூரில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: இண்டூரில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2021 6:18 PM GMT (Updated: 17 March 2021 6:20 PM GMT)

இண்டூரில் செயல்பட்டு வந்த மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் இண்டூரில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை அதகபாடி கிராமத்தில் புதியதாக  கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒகேனக்கல்-தர்மபுரி சாலையில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது இண்டூரிலேயே மின்வாரிய அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதகபாடிக்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் சரவணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய அலுவலகம் இண்டூரிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story