கோவையில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போடுகிறார்கள்


கோவையில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போடுகிறார்கள்
x
தினத்தந்தி 18 March 2021 12:22 AM IST (Updated: 18 March 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 

அடுத்த கட்டமாக போலீசார், வருவாய்த்துறையினருக்கு போடப் பட்டன. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

தினமும் 6 ஆயிரம் பேர் 

இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் 130 இடங்களிலும், தனியார் ஆஸ்பத்திரிகள் 70 இடங்கள் என மொத்தம் 200 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

கோவை மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தினமும் 5 ஆயிரத்து 500 முதல் 6 ஆயிரம் பேர் வரை தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது-

அதிகரிப்பு ஏன்?

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினார்கள். 

இதற்காக முன்களப்பணியாளர்களே முன்வரவில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் பலர் தாமாக முன்வந்து போட்டுக் கொள்கிறார்கள்.

தற்போது கொரோனா 2-வது அலை பீதி காரணமாகவும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அவர்களில் யாருக்கும் இதுவரை எந்த பக்க விளைவுகளும் ஏற்பட்டதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story