ஆனைகட்டி அருகே சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தையால் பரபரப்பு


ஆனைகட்டி அருகே சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தையால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2021 7:05 PM GMT (Updated: 17 March 2021 7:06 PM GMT)

ஆனைகட்டி அருகே சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

துடியலூர்,

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. 

இதில் காட்டு யானை மலை யோர கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அதுபோன்று வனப்பகுதியில் உள்ள சாலையில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 

குறிப்பாக கோவையில் இருந்து ஆனைகட்டிக்கு செல்லும் மலைப்பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. 

சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தை 

இந்த நிலையில் இந்த சாலையில் மாங்கரை சோதனை சாவடி அருகே மலைப்பாதையில் விநாயகர் கோவில் எதிரே இரவில் சாலையின் நடுவே ஒரு சிறுத்தை அமர்ந்து இருந்தது. 

இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
உடனே அவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, அந்த சிறுத்தையை செல்போன்களில் வீடியோ எடுத்தனர். 

சிறிது நேரம் சாலையில் இருந்த சிறுத்தை அங்குமிங்கும் பார்த்துவிட்டு பின்னர் வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரோந்து செல்வது இல்லை 

சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு, அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் சென்றன. 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஆனைகட்டி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவில் இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனால் வனத்துறையினர் ரோந்து செல்வது இல்லை. 

இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே பயமாக இருக்கிறது. எனவே வனத்துறை யினர் தினமும் ரோந்து செல்ல வேண்டும் என்றனர்.

இதற்கிடையே நடுரோட்டில் அமர்ந்து இருந்த சிறுத்தை வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


Next Story