ஈரோட்டில் இரட்டை கொலை வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ஈரோட்டில் இரட்டை கொலை வழக்கில்  5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 March 2021 8:45 PM GMT (Updated: 17 March 2021 8:45 PM GMT)

ஈரோட்டில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோட்டில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இரட்டை கொலை
ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் குணசேகரன் (வயது 29). ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (31). இவர்கள் 2 பேரும் ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக ஈரோடு கோர்ட்டில் கடந்த மாதம் 10-ந் தேதி ஆஜராகி விட்டு வெளியே வந்தனர்.
அதன்பிறகு குணசேகரனும், கலைச்செல்வனும் தங்களது நண்பர்களுடன் ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதிக்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கலைசெல்வனும், குணசேகரனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த வழக்கில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த குமாரின் மகன் ரவிச்சந்திரன் (24), அன்னை சத்யாநகரை சேர்ந்த கார்த்தி (27), செட்டிபாளையம் இந்திராநகரை சேர்ந்த மதன் (26), ஜான்சிநகரை சேர்ந்த அழகிரி (23), கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த பத்மநாதன் (31), பர்கான் (36), வைராபாளையம் நேதாஜி வீதியை சேர்ந்த கிருஷ்ணன் (23), அசோகபுரத்தை சேர்ந்த முரளிதரன் (25), வீரப்பன்சத்திரம் குழந்தை அம்மாள் வீதியை சேர்ந்த சிவா (26), தமிழரசன் (22), மரப்பாலம் ஆலமரத்தெருவை சேர்ந்த லோகேஸ்வரன்   (22) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ரவிச்சந்திரன், பத்மநாபன், மதன், அழகிரி, லோகேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார். 
அவரது பரிந்துரையின்பேரில் ரவிச்சந்திரன், பத்மநாபன், மதன், அழகிரி, லோகேஸ்வரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
 அவர்கள் ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story