பெருந்துறையில் லாரி கவிழ்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு டேங்க் உடைந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியது


பெருந்துறையில் லாரி கவிழ்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு டேங்க் உடைந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியது
x
தினத்தந்தி 18 March 2021 2:33 AM IST (Updated: 18 March 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் டேங்க் உடைந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருந்துறையில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் டேங்க் உடைந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று பெட்டிகளில் வெண்ணெயை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. காலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சென்றபோது காஞ்சிக்கோவில் ரோட்டில் இருந்து அண்ணா சிலையை கடந்து செல்ல, டிரைவர் லாரியை கோவை மெயின் ரோட்டில் திருப்ப முயன்றார்.
அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக லாரி நடுரோட்டில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. 
டீசல் ஆறாக ஓடியது
இந்த விபத்தில் லாரி டேங்க் உடைந்து அதிலிருந்து டீசல் வெளியேறி ரோடு முழுவதும் ஆறு போல் ஓடியது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து ஏற்படுவதை தடுக்க உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து ரோட்டில் பரவியிருந்த டீசலை அப்புறப்படுத்தினர். இதனால் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இதனால் காஞ்சிக்கோவில் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story