ரத்த சோகை காரணமாக காட்டு யானை சாவு

சிறுமுகை வனப்பகுதியில் ரத்த சோகை காரணமாக காட்டு யானை இறந்தது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்ட சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மயில் மொக்கை சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த உதவி வனப்பாதுகாவலர்கள் செந்தில் குமார், தினேஷ்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த யானையை பார்வையிட்டனர்.
பிரேத பரிசோதனை
அப்போது அந்த யானை இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும், அதற்கு 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அத்துடன் அதன் உடல்பாகங்கள் சோதனைக்காக எடுக்கப்பட்டு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானையின் உடல் கிடந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதன் உடல், மற்ற விலங்குகளுக்கு இரையாக விடப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது
ரத்த சோகை
இறந்த யானையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அதன் வயிறு மற்றும் சிறுகுடலில் தீவனப்பொருள் எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. ரத்தம் போதுமான அளவு இல்லாமல் ரத்தசோகைக்கான அறிகுறிகள் காணப்பட்டன.
அதன் இதயத்தில் மிக அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக மிகவும் சிவந்து காணப்பட்டது. எனவே ரத்த சோகை மற்றும் பட்டினி காரணமாக அதன் இதயம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story