தமிழக சட்டமன்ற தேர்தலில் 'அ.தி.மு.க., தி.மு.க.வை வீழ்த்துவதே எங்கள் ஒரே நோக்கம்' டி.டி.வி.தினகரன் பேட்டி


தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை வீழ்த்துவதே எங்கள் ஒரே நோக்கம் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 March 2021 12:22 AM GMT (Updated: 18 March 2021 12:22 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை வீழ்த்துவதே எங்கள் ஒரே நோக்கம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னை, 

அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சசிகலா மானசீக ஆதரவு

விஜயகாந்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையிலானதா? தேர்தல் அடிப்படையிலானதா?

பதில்:- எந்த கூட்டணி கொள்கை அடிப்படையில் உள்ளது? எங்களது ஒரே கொள்கை, தமிழ்நாட்டில் தீய சக்தியான தி.மு.க.வையும், துரோக சக்தியான அ.தி.மு.க.வையும் வரவிடக்கூடாது என்பதுதான். தேர்தலில் அவர்களை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம்.

கேள்வி:- சசிகலாவின் ஆதரவு உங்கள் கூட்டணிக்கு உண்டா?

பதில்:- நிச்சயமாக உண்டு. சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கும்.

வெற்று வாக்குறுதிகள்

கேள்வி:- அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடைசி நேரத்தில் இந்த கூட்டணியை அமைக்கவேண்டிய கட்டாயம் என்ன?

பதில்:- கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் 10, 15 நாட்களாக பேசிக்கொண்டு இருந்தோம். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைந்தவுடன் எங்கள் வேட்பாளர்கள் 42 பேர் முழுமனதோடு விட்டுக்கொடுத்தார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம் என்ற அறிவிப்பு தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்:- வெறும் வெற்று வாக்குறுதிகளை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அளித்துள்ளன என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.

மக்கள் வரவேற்கிறார்கள்

கேள்வி:- 2 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஆதரித்த தே.மு.தி.க.வும், 4 ஆண்டுகளாக அதனை எதிர்த்த அ.ம.மு.க.வும் இணைந்துள்ள முரண்பாட்டை மக்கள் எப்படி பார்ப்பார்கள்?

பதில்:- தே.மு.தி.க. எங்களோடு கூட்டணி வைத்துள்ளதை மக்கள் வரவேற்கத்தான் செய்கிறார்கள்.

கேள்வி:- ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், அ.தி.மு.க-பா.ஜ.க.வுக்கு உங்கள் ஆதரவை வழங்குவீர்களா? மாட்டீர்களா?

பதில்:- தொங்கு சட்டசபை, ஊஞ்சல் சட்டசபைகளை பற்றி நான் யோசிப்பதே இல்லை.

கோவில்பட்டியில் வேட்புமனு

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நீங்கள் கோவில்பட்டியில் போட்டியிடுவது ஏன்? தோல்வி பயமா?

பதில்:- ஜெயலலிதா காலத்திலேயே எனது செயல்பாடுகள் தென்மாவட்டங்களில்தான் இருந்தன. அங்கே ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன்.

கேள்வி:- தே.மு.தி.க. பக்குவமற்ற கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?

பதில்:- இவர் (எடப்பாடி பழனிசாமி) ரொம்ப பக்குவம் உள்ளவர். முதல்-அமைச்சர் ஆக்கியவர்களையே எந்த ஊர் என்கிறவர்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பதில் அளித்தார்.


Next Story