ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 20 March 2021 8:00 AM GMT (Updated: 20 March 2021 5:26 AM GMT)

ராஜபாளையம் உட்பட விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன் என்று பல்வேறு சமுதாய தலைவர்களின் சந்திப்பின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்,

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். இந்நிலையில் ராஜபாளையத்தில் பல்வேறு சமுதாய தலைவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ராஜபாளையம் மறவர் மகாசபை, ராஜபாளையம் நாடார் உறவின்முறை,  கிருஷ்ணமராஜா நாடார் உறவின்முறை, வீரக்கொடி வேளாளர் சமுதாயம், செவல்பட்டி நாயுடு சமுதாயம், துரைச்சாமிபுரம் தேவேந்திரகுலவேளாளர் சமுதாயம்,  பி.எஸ்.கே பார்க் ஆதிதிராவிடர் சமுதாயம், விவேகானந்தர் தெரு இல்லத்துபிள்ளைமார் சமுதாயம், சின்னசொரைக்காய்பட்டி சேனைத்தலைவர் சமுதாயம், வணிக வைசியர் கூரை பிள்ளையார் கோவில் தெரு, கட்டுவிநாயகர் கோவில் மறவர் பொதுப்பண்டு, சம்மந்தாபுரம் யாதவர் சமூகம், பெரிய சுரைக்காய்பட்டி கவுரவ நாயுடு சமூகம், பெரிய சுரைக்காய்பட்டி மறவர் பொதுபண்டு, மலையடிப்பட்டி விஸ்வகர்மா சமூகம், புதுப்பாளையம் மருத்துவர் சமூகம், ரெங்கபாளையம் தேவர் ஐக்கிய மகா சபை உட்பட பல்வேறு சமுதாய நிர்வாகிகள், பொதுமக்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சந்தித்து  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, அனைத்து சமுதாய மக்களிடமும் நான் நண்பராக பழக கூடியவன். எனக்கு எல்லா சமுதாயத்திலும் நண்பர்கள் வட்டாரம் அதிகமாக உள்ளனர். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எனக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

ராஜபாளையம் சமுதாய வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பேன். நண்பனாக, சகோதரனாக தொகுதியில் பணியாற்றுவேன். ராஜபாளையம் தொகுதி கிராமங்களுக்கு முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டா நகர் கூட்டு குடிநீர் திட்டம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதிகளுக்கு வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம், சாத்தூர் நகராட்சிக்கு இருக்கன்குடி குடிநீர் திட்டம், திருத்தங்கல், சிவகாசி நகராட்சிக்கு மானூர் கூட்டு குடிநீர் திட்டம் என  விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டுக் குடிநீர் திட்டத்தை நான் கொண்டு வந்துள்ளேன்.

சிவகாசி எனது சொந்த தொகுதி என்றாலும் ராஜபாளையம் எனது சொந்தக்காரர் தொகுதியாகும். நான் சிவகாசிக்கு மட்டும் அமைச்சராக பணியாற்றவில்லை. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் திட்டங்களை கொண்டு வந்து அமைச்சராக பணியாற்றி உள்ளேன். பத்து நாளைக்கு முன்பு கூட சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகளை அமைக்க நிதி வாங்கி கொடுத்து உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் 14 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளேன். தேர்தல் தேதி தாமதமாக அறிவிப்பார்கள் என்று கருதி இன்னும் கூடுதலான அம்மா மினி கிளினிக் திறக்க முடியவில்லை.

தேர்தல் முடிந்தவுடன் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும். 15 ஆண்டுகள் நகராட்சித் துணைத் தலைவராக இருந்த அனுபவம் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அனுபவம் எனக்கு உள்ளது. எனவே ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை நான் கொண்டு வருவேன்.

ராஜபாளையம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தை சேத்தூரில் நான்  பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்த போது  இப்போதுள்ள திமுக எம்எல்ஏ அப்போது எம்எல்ஏ  கிடையாது. எந்த அடிப்படையில் இந்த கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு திமுக எம்எல்ஏ உரிமை கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை.

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களை நான் தான்கொண்டு வந்துள்ளேன். இங்கு வாழும் சமுதாய மக்கள் மற்ற சமுதாய மக்களோடு இணைந்து பணியாற்ற கூடியவர்கள். அனைவரும் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

Next Story