‘தி.மு.க.வை இந்த தேர்தலோடு மறந்துவிடுங்கள், இனி வெற்றிபெற வாய்ப்பே இல்லை’-டாக்டர் ராமதாஸ் பேச்சு


‘தி.மு.க.வை இந்த தேர்தலோடு மறந்துவிடுங்கள், இனி வெற்றிபெற வாய்ப்பே இல்லை’-டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 20 March 2021 1:12 PM GMT (Updated: 20 March 2021 1:12 PM GMT)

தி.மு.க.வை இந்த தேர்தலோடு மறந்துவிடுங்கள், இனி எந்த தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என கீழ்பென்னாத்தூரில் டாக்டா் ராமதாஸ் பேசினார்.

கீழ்பென்னாத்தூர்

தி.மு.க.ைவ இந்த தேர்தலோடு மறந்துவிடுங்கள், இனி எந்த தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என கீழ்பென்னாத்தூரில் டாக்டா் ராமதாஸ் பேசினார்.

தேர்தல் பிரசார கூட்டம்

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் பா.ம.க. சார்பில் 
தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.  

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு, கீழ்பென்னாத்தூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் கா.செல்வகுமாரை ஆதரித்து காரில் இருந்தவாறு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமருவது உறுதி. யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

நகை கடன் தள்ளுபடி

கல்வி, விவசாய வளர்ச்சி மற்றும் மக்கள் முன்னேற்றம் ஆகியவற்றை அ.தி.மு.க., பா.ம.க. தேர்தல் அறிக்கை பறைசாற்றுகின்றன. 
குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ.1,500, குடும்பத்துக்கு 6 கியாஸ் சிலிண்டர், வாஷிங்மெஷின், மானிய விலையில் விவசாய இடுபொருட்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிகுழு கடன் தள்ளுபடி என இன்னும் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்வெட்டு இருந்தது. இந்த ஆட்சியில் மின் வெட்டு இல்லை. பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர்.

தி.மு.க.வை இந்த தேர்தலோடு...

தி.மு.க.வை இந்த தேர்தலோடு மறந்துவிடுங்கள். இனி எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பே இல்லை. 

எனவே உங்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடும்  வகையில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள செல்வகுமாருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தணிகைவேல் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டில், போளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், ‘இங்கு வந்துள்ள இளைஞர்களின் ஆர்ப்பரிப்பை பார்த்தவுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வை புரிந்துகொண்டு அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவார் 
’  என்றார்.

ராமதாஸ் காரில் இருந்தவாறு பேசிக்கொண்டிருந்த போது காமராஜர் சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் போளூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூடியிருந்த மக்கள் இடத்தில் இரட்டை இலையை சின்னத்தை காண்பித்து ஓட்டு சேகரித்தார்.

Next Story